ஸ்ரீவில்லிபுத்தூரில் மலைவாழ் மக்களுக்கு பேரிடர் நிவாரண உதவி...

ஸ்ரீவில்லிபுத்தூரில் மலைவாழ் மக்களுக்கு  பேரிடர் நிவாரண உதவி...



 விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் ரூ.3 லட்சம் மதிப்பிலான  கொரோனா பேரிடர் நிவாரண உதவி  வழங்கப்பட்டது.

1983 ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ரா.தாமரைக்கனி, ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்டத்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு என்ற பகுதியில் ஆண்டாள் கோவில் நிலங்களை குத்தகைக்கு எடுத்த சிலர் தங்கள் தோப்புகளில் பளியர்  பழங்குடியினருக்கு அரைப்படி குருணை அரிசியும், வெற்றிலை மற்றும் புகையிலையும் தினக் கூலியாகக் கொடுத்து வேலை வாங்குவதாக பேசினார்.
இந்தச் செய்தி 1983 அக்டோபர் மாதம் 13 ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் முதல் பக்க செய்தியாக வெளியிட்டிருந்தது. அதன் உண்மைநிலையை அறிந்து சோக்கோ அறக்கட்டளை யின் மேலாண்மை அறங்காவலர் மகபூப்பாட்சா, அன்றைய உச்சநீதிமன்ற நீதிபதி  பி.என்.பகவதி க்கு தந்தி அனுப்ப, அதை அவர் நீதிப் பேராணையாக (ரிட்மனுவாக) ஏற்று விசாரணை நடைபெற்றது.  அதன் விளைவால் கொத்தடிமைகளாயிருந்த மலைவாழ் மக்கள் மீட்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வாழ்வாதரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்தது.
தற்போது ஏற்பட்டுள்ள பேரிடரால், இப் பகுதியில் உள்ள 34 குடும்பங்களைச் சேர்ந்த மலைவாழ் தங்களது வாழ்வாதராம் பாதிக்கப்பட்டுள்ளது என அறக்கட்டளைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

நீதிபதி பகவதி பவுண்டேசன், சிவராஜ் பாட்டீல் பவுண்டேசன், சோக்கோ அறக்கட்டளை ஆகியவை இணைந்து மலைவாழ் மக்கள் 34 பேரின் குடும்பங்களுக்கு உதவி செய்ய முன்வந்தது.
சோக்கோ அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் மகபூப்பாட்சா, பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் பரவை பாலு, ஸ்ரீவில்லிபுத்தூர் வங்கி கிளை துணை மேலாளர் என்.எஸ்.வேலாயுதம், சிவராஜ் பாட்டீல் பவுண்டேசன் மேலாண்மை அறங்காவலர் செல்வகோமதி மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து முதல் கட்டமாக  34 குடும்பங்களுக்கு நீதிபதி பகவதி நகர் ( செண்பகத் தோப்பு) தலைவர் கோபால் முன்னிலையில் நிவாரணப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் பலசரக்கு சாமான்கள், காய்கறிகள் முதலியவற்றை வழங்கினர்.

No comments:

Post a Comment