அரசுப் பள்ளிகளை தனியார் மயமாக்க நீதி ஆயோக் பரிந்துரை: வைகோ கண்டனம்

அரசுப் பள்ளிகளை தனியார் மயமாக்க நீதி ஆயோக் பரிந்துரை: வைகோ கண்டனம்

அரசுப் பள்ளிகளைத் தனியார்மயமாக்க நீதி ஆயோக் பரிந்துரைத்திருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தனியார் மயம், தாராளமயத்தை தீவிரமாக செயல்படுத்த மத்திய அரசுக்கு நிதி ஆயோக் அனைத்துப் பரிந்துரைகளையும் வழங்கி வருகிறது.
வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கூடாது, வேளாண்மைத் துறைக்கான மானியங்கள், உணவுத் துறைக்கான மானியங்களை ரத்து செய்தல், பொது விநியோகத் திட்டத்தைக் கைவிடுதல் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை மத்திய அரசுக்கு நீதி ஆயோக் அளித்து வருகிறது. 
இவற்றை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது. தற்போது கல்வித் துறையை தனியார் மயமாக்குவதற்கான ஒரு பரிந்துரையை நீதி ஆயோக் மத்திய அரசுக்கு அளித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கான திட்ட அறிக்கையை நீதி ஆயோக் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில், 2010-2014 ஆம் ஆண்டில் 13,500 அரசுப் பள்ளிகள் அதிகரித்துள்ளன. எனினும் அரசுப் பள்ளிகளில் ஒரு கோடியே 13 லட்சம் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. ஆனால் தனியார் பள்ளிகளில் ஒரு கோடியே 65 இலட்சம் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.
2014-15-ஆம் கல்வி ஆண்டில் 3 லட்சத்து 70 ஆயிரம் பள்ளிகளில் வெறும் 50-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். எனவே சரியாகச் செயல்பட முடியாத நிலையில் உள்ள அரசுப் பள்ளிகளை தனியாருடன் இணைந்து செயல்படுத்த அரசு முன்வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.
இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு இப்போது எடுத்துவருவதாகவும் தெரிகிறது. ஏழை, எளிய மக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கும் நிலையை அடியோடு ஒழிப்பதற்கு மத்திய அரசு திட்டமிடுவது ஆபத்தானது ஆகும். மத்திய அரசுக்கு நீதி ஆயோக் அளித்து வரும் மக்கள் விரோத பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment