அனிதாவின் கூட்டாஞ்சோறு – விழியன்

*அனிதாவின் கூட்டாஞ்சோறு    – விழியன்  (மழலைக் கதை வரிசை – 107)*

ரஹீம் தன்னுடைய பங்கான பெரிய பித்தளை சொம்புடன் வயல்களைத் தாண்டி இருக்கும் பெரிய ஆலமரத்திற்கு ஓடினான். ஏற்கனவே அங்கு அனிதா வந்து சேர்ந்திருந்தாள். இன்று அரை ஆண்டு விடுமுறை துவங்குகின்றது. சில நாட்கள் மட்டுமே விடுமுறை என்பதால் யாரும் வெளியூருக்குச் செல்லவில்லை. தினமும் தேர்வு எழுதும் போதே விடுமுறையினை எப்படி செலவிடுவது என்று முடிவு செய்திருந்தார்கள்.

அந்த முடிவின்படி இன்று கூட்டாஞ்சோறு விளையாட்டு. அனைவரும் கூடி ஒன்றாக சமைப்பது. ஆனால் யாருக்கும் என்ன சமைப்பது என்று தெரியாது. அனிதா தான் ஒவ்வொருவரும் என்ன கொண்டு வரவேண்டும் என்று கட்டளையிட்டு இருந்தாள். ரஹீம் பெரிய சொம்பு, டேவிட் கொஞ்சம் அரிசி, ராகவி கொஞ்சம் வெல்லம், மணி சில குச்சிகள், ரெஜினா ஒரு தீப்பெட்டி. அவ்வளவு தான். மிக எளிமையான, எந்த வீட்டிலும் திட்டு வாங்காத அளவிற்கே பொருட்கள்.
”என்ன அனிதா கையில் என்ன புக்?” என்றான் ரஹீம். அவள் கையில் இருந்தது ஏழாம் வகுப்பு அறிவியல் பாட புத்தகம். இவர்கள் அனைவரும் படிப்பது ஐந்தாம் வகுப்பு தான். “அகமதோட அண்ணன் புக் ரஹீம். எப்படியும் ரெண்டு வருஷம் கழிச்சு படிக்கப்போறோம். சும்மா பார்த்துகிட்டு இருந்தேன்” என்றாள் அனிதா.

மூச்சு வாங்கியபடி டேவிட் ஓடிவந்தான். ஒரு மஞ்சள் பையில் அவனுடைய பங்கான அரிசையை எடுத்து வந்திருந்தான். “ஏன்பா, என்கிட்ட என்ன அரிசின்னு சொல்லி இருக்கனும் இல்ல. ரெண்டு அரிசி இருக்காமே. இட்லிக்கு ஒரு அரிசி, சாதத்துக்கு ஒரு அரிசின்னு. எங்கம்மா கிட்ட கேட்டேன். என்ன செய்யப்போறீங்கன்னு கேட்டாங்க. தெரியலன்னு சொன்னேன். இந்தா இதை எடுத்துட்டு போன்னு சொன்னாங்க.” என்று மஞ்சள் பையை நீட்டினான் டேவிட்.

தேவையான அளவு அரிசியை மட்டும் எடுத்து பம்ப் செட் அருகே சென்று கழுவ ஆரம்பித்தாள். ரஹீமும் டேவிட்டும் அருகே நின்றிருந்தார்கள். “அடுத்த முறை நாங்க செய்யனும் இல்ல” என்றார்கள். இன்னும் தங்கள் சக கூட்டாளிகள் வரவில்லை என்று நோட்டம் விட்டுக்கொண்டே இருந்தார்கள்.

ரெஜினா, ராகவி மற்றும் மணி மூவரும் ஒன்றாக வந்தார்கள். அவர்களுக்கு நிர்ணயித்த பொருளை சரியாக எடுத்து வந்தார்கள். கூடவே ஒரு குட்டி டிக்கெட்டும். மணியின் தங்கையும் வந்திருந்தாள். அரிசியை கழுவிவிட்டு ஆலமரத்தில் கீழே வந்தார்கள். குச்சிகளை கீழே வைத்து, ரெண்டு பெரிய கற்களை அடுப்பு போல வைத்தார்கள். நெருப்பு மூட்டினார்கள். வெறும் அரிசியும் தண்ணீரும் மட்டும் பாத்திரத்தில் இருந்தது. அதில் வெல்லத்தை கொட்டினான் மணி.

சோறு கொதிப்பதை எல்லோரும் அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தார்கள். பாக்கெட்டில் இருந்து இரண்டு பர்பி துண்டுகளை எடுத்தான் ரஹீம். “இவ்ளோ தான் இருக்கு எல்லோருக்கும் ஒரு கடி மட்டும் தான்” என்று எவ்வளவு கடிக்க வேண்டும் என்று அனிதாவே கூறினாள்.

“கொதிக்கப்போகுது, துழாவ கரண்டி இருந்தா நல்லா இருக்கும்” என்றாள் ரெஜினா. அனிதா எழுந்து சென்று எங்குருந்தோ ஒரு குச்சியை உடைத்து வந்தாள். இதான் கரண்டி என்றாள். துழாவினார்கள். ஒரு மணமும் வரவில்லை ஆனாலும் ஆஹா என்ன மணம் என்ன மணம் என்று சொல்லிக்கொண்டார்கள்.

“ஹே, சாப்பிட தட்டு?” என்றாள் மணியின் தங்கை. ஆமால்ல அதை மறந்துட்டோமே. பாத்திரத்தில் கையைவிட்டு நேரா சாப்பிட்டுக்கலாமா? ரெஜினா ஒரு யோசனைச் சொன்னாள். “அதோ வாழைமரத்தோட்டம் இருக்கில்ல அங்கிருந்து பாதி இலை எடுத்துட்டு வந்தா போதும்” என்று சொல்வதற்குள் ரஹீமும் டேவிட்டும் ஓடினார்கள்.
சாப்பாடு தயார். கொதி வந்து அடங்கிவிட்டது. அதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. அனிதா எல்லோருக்கும் பரிமாறினாள். குச்சியை கரண்டியாக்கி இலையை தட்டாக்கி எல்லோரும் வயல்வரப்பின் ஓரத்தில் அமர்ந்து, ஓடும் நீரில் கால் வைத்து உண்ண ஆரம்பித்தார்கள்.

“செம சுவைப்பா” என்றான் மணி
ஆமாம் ஆமாம் என்றனர் எல்லோரும் தலையாட்டியபடி.

“அனிதா, நீ பெரியவளாகி பெரிய ஹோட்டல் கட்டு, அருமையா சமைக்கிற” என்றான் ரஹீம்.

”ரஹீம், அனிதா அம்மா எப்படி செத்தாங்கன்னு மறந்துட்டியா? ஒழுங்கா வைத்தியம் பார்க்க முடியாம, என்ன விவரமும் தெரியாம இல்லை இறந்து போனாங்க” என்றாள் ராகவி

“ஆமா ரஹீம், நான் டாக்டராகப்போறேன்” என்றாள் அனிதா உறுதியாக.

- *விழியன்*

No comments:

Post a Comment